பாண்டியர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு


பாண்டியர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு
x

நரிக்குடி அருகே பாண்டியர் கால சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன.

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி அருகே பாண்டியர் கால சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன.

பழமையான சிற்பங்கள்

நரிக்குடி அருகே ஆற்றுப்படுகையில் பழமையான சிற்பங்கள் இருப்பதாக பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளரும், வரலாற்றுத்துறை உதவி பேராசிரியருமான தாமரைக்கண்ணன் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த சிற்பங்கள் பிற்கால பாண்டியர்கள் காலத்தை சேர்ந்தவை என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

திருமால் சிற்பமானது 4 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் 4 கரங்களுடன் காணப்படுகிறது. இதில் 3 கரங்கள் முற்றிலும் சிதைந்தும், ஒரு கரம் மட்டும் முழுமையாக ஊருஹஸ்தமாக இடம் பெற்றுள்ளது. மேலும் தலையில் கிரீட மகுடமும், கழுத்தில் ஆபரணமும், மார்பில் முப்புரிநூலும் இடைக்கு மேலே உதிரபந்தமும், இடைக்கச்சை அணிந்தவாறும் பிற்கால பாண்டியரின் கலை நயத்தில் அழகாக செதுக்கப்பட்டு வடிக்கப்பட்டுள்ளது.

700 ஆண்டுகள்

மேலும் இந்த சிற்பத்தை பார்க்கும் போது 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பமாக கருதலாம். முருகன் சிற்பமானது 3 அடி உயரத்தில் தெளிவான முகத்தோற்றத்துடனும், 4 கரங்களில் 2 கரங்கள் முற்றிலும் சிதைந்த நிலையிலும், முன் இரு கரங்களில் வலது கரம் அபயஹஸ்தமாகவும், இடது கரமானது ஊருஹஸ்தமாகவும் செதுக்கப்பட்டுள்ளது.

தலையில் கிரீடம் சிதைந்த நிலையிலும் நீண்ட காதுகளில் குண்டலங்களும், கழுத்தில் ஆபரணமும், மார்பில் வீர சங்கிலியும், சன்னவிரமும் இடம்பெற்றுள்ளது. மேலும் முப்புரிநூலும் உதிர பந்தமும் செதுக்கப்பட்டுள்ளது. இடையில் இடைக்கச்சை அணிந்தபடி சிற்பம் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது.

ஆற்றுப்படுகை

இந்த சிற்பத்தை பார்க்கும் போது பிற்கால பாண்டியரின் கைவண்ணத்தில் உருவானதாக கருதலாம். இந்தநிலையில் தற்போது கண்டெடுக்கப்பட்ட 2 சிற்பங்களின் வடிவமைப்பை வைத்து பார்க்கும் போது நரிக்குடியில் அமைந்துள்ள பிற்கால பாண்டியர் கால விருப்பாச்சிநாதர் சிவன் கோவிலின் சிற்பங்களாக இருக்கலாம்.

அதன் அருகில் கிருதுமால் நதி உள்ளதால் காலப்போக்கில் இந்த 2 சிற்பங்களும் ஆற்று நீரில் அடித்து வரப்பட்டு நரிக்குடி அருகே உள்ள ஆற்றுப்படுகை பகுதிக்கு வந்திருக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story