ராஜேந்திர சோழன் கால கோட்டைவாசல் தூண் கண்டெடுப்பு


ராஜேந்திர சோழன் கால கோட்டைவாசல் தூண் கண்டெடுப்பு
x

ராஜேந்திர சோழன் கால கோட்டைவாசல் தூண் கண்டெடுக்கப்பட்டது.

அரியலூர்

அகழாய்வு பணி

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உட்கோட்டை கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழப்பேரரசரான முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் அவருக்கு பின்னால் ஆண்ட சோழ மன்னர்களின் அரண்மனை இருந்ததாக கூறப்படும் மாளிகைமேடு பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின.

இந்த பணியின்போது பழங்கால கூரை ஓடுகள், பானை ஓடுகள், சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தினாலான ஓடுகள், இரும்பினாலான ஆணிகள், சீன கலைநயமிக்க மணிகள் போன்ற பொருட்கள், பானை விளிம்புகள், சிறிய அளவிலான அரிய பொருட்கள், கட்டிடங்கள் இருந்ததற்கான எச்சங்கள் கிடைத்தன. அவை தொல்லியல் துறையினரால் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச்சுவர், வடிகால் அமைப்பு போன்ற சுவர் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முதற்கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்தது.

பழங்கால பொருட்கள்

இதைத்தொடர்ந்து இப்பகுதியில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11-ந் தேதி தொடங்கியது. இந்த பணியின்போது சோழர் காலத்து கட்டிட எச்சங்கள், பழங்கால அரண்மனை சுற்றுச்சுவர்களின் தொடர்ச்சி, பழங்கால பானை மற்றும் ஐம்பொன் கலந்த செப்பு காப்பு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. பின்னர் இந்த பணிகள் நிறைவடைந்தன.

இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மாளிகைமேட்டில் 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில் சில நாட்களுக்கு முன்பு, 11-ம் நூற்றாண்டில் தமிழகத்திற்கும், சீன நாட்டிற்கும் இடையிலான வணிகத் தொடர்பை உறுதி செய்யும் வகையில் சீன பானைவோடுகள், காசு வார்ப்பு, சுடு மண்ணால் அலங்கரிக்கப்பட்ட அச்சு முத்திரை ஆகிய 3 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

கல் தூண்

இந்நிலையில் மாளிகைமேட்டை அடுத்த உட்கோட்டை பகுதியில் உள்ள அய்யனார் கோவில் அருகே அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் நேற்று கிரானைட் கல் தூண் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த தூண் 72 செ.மீ. அகலமும், 6.40 மீட்டர் நீளமும் கொண்டதாக உள்ளது. இந்த தூணானது தரையில் பக்கவாட்டில் கிடப்பதால் உடைந்திருக்கலாம் அல்லது சாய்ந்து இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. மேலும் இந்த இடத்தில் அகழ்வாய்வு பணியை தொடரும்போதுதான் அதனுடைய முழு விவரமும் தெரியக்கூடும். இந்த கல்தூணானது ராஜேந்திர சோழன் காலத்தில் மாளிகையின் தென்பகுதி கோட்டை வாசலில் இருந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இது குறித்து தொல்லியல் துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story