தென்கொளப்பாக்கம் கிராமத்தில்பல்லவர்கள் கால ஏரி தூம்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு


தென்கொளப்பாக்கம் கிராமத்தில்பல்லவர்கள் கால ஏரி தூம்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2023 12:15 AM IST (Updated: 6 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்கொளப்பாக்கம் கிராமத்தில் பல்லவர்கள் கால ஏரி தூம்பு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்


மயிலம்,

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ் மற்றும் விழுப்புரம் பிரகாஷ் ஆகியோர் மயிலம் அருகே தென்கொளப்பாக்கம் கிராமத்தில் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு ஏரி தூம்பு கல்வெட்டு இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

மனித வரலாற்றில் வேளாண்மை முக்கிய தொழிலாகும். இதற்கு அடிப்படை தண்ணீர். எனவே நீரினை பழங்காலத்தில் தமிழர்கள் எவ்வாறு போற்றி சேமித்து பயன்படுத்தினர் என்பதை இலக்கியங்களும், கல்வெட்டுகளும், செப்பேடுகளும் கூறுகின்றன. நீர் மேலாண்மைக்கு அடிப்படையாய் அமைந்ததை அக்கால கட்டமைப்புகளும், சான்றுகளும் நமக்கு தெளிவுப்படுத்துகின்றன.

பல்லவர் காலத்தை சேர்ந்தது

ஒரு நாட்டின் வளமையும், வலிமையும் நீர் ஆதாரங்களை பொறுத்தே அமைகிறது. சங்க காலம் தொட்டே நீர் நிலைகள் பற்றிய சான்றுகள் கிடைக்கின்றன. பல்லவர்கள் மற்றும் பாண்டியர்கள் ஏரி, குளம், கிணறு ஆகிய நீர் ஆதாரங்களை உருவாக்கியதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பல்லவர் காலத்தில் மகேந்திர தடாகம், சித்திரை மேகதடாகம், பரமேஸ்வர தடாகம், வைர மேகதடாகம் போன்று பல ஏரிகள் உருவாக்கப்பட்டன. அந்த வகையில் தென்கொளப்பாக்கத்தில் பல்லவர் காலத்தை சேர்ந்த ஏரி தூம்பு கல்வெட்டு தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் இரு பலகை கற்களில் மேற்புறம் அரை வட்ட வடிவம் அமைந்துள்ளது. 2 பலகை கல்லில் ஒன்றில் மட்டும் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டு வாசகம், 'ஸ்ரீஸ்வஸ்தி ஸ்ரீ வழி கரையனார் மணவாட்டியார் நங்கரைசியார் இடுவித்த தூம்பு' வழி கரையனார் என்பவரின் மனைவி நங்கரைசியார் என்பவர் இத்தூம்பை அமைத்தார் என்பது பொருளாகும்.

இதன் எழுத்தமைதி கொண்டு பொது ஆண்டு ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கமான பல்லவர் காலத்தை சேர்ந்தது. ஏரி தூம்பு என்பது மழைநீரை தேக்கி வைத்து தேவைப்படும்போது பாசனத்துக்கு சீராக பயன்படுத்த அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். மேலும் ஒரு பெண் இத்தூம்பினை அமைத்துக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அய்யனார் சிற்பம்

மேலும் இத்தூம்பு அருகில் பெரிய ஏரி என்னும் பெயரில் ஒரு ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்த தூம்பு பின்னர் இடமாறியுள்ளது. இந்த ஊரில் 5-க்கும் மேற்பட்ட குளங்கள் இருப்பதால் இவ்வூர் குளத்தின் அடிப்படையில் குளப்பாக்கம் என்று அழைக்கப்பட்டு பின்னர் தென்கொளப்பாக்கம் என்றும் மருவியுள்ளது. இவ்வூரின் வடக்கே வயல்வெளியில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த கிராமியக்கலையில் உருவாக்கப்பட்ட அய்யனார் சிற்பம் குதிரை மற்றும் நாயுடன் காணப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story