விஜயநகர காலத்து நடுகல் கண்டெடுப்பு


விஜயநகர காலத்து நடுகல் கண்டெடுப்பு
x

திருப்பத்தூர் அருகே விஜய நகர காலத்து நடுகல் கண்டெடுக்கப் பட்டுள்ளது.

திருப்பத்தூர்

நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் க.மோகன் காந்தி, ஆங்கிலத்துறை பேராசிரியர் மதன்குமார், காணிநிலம் மு.முனிசாமி, கண் மருத்துவர் வினோதினி, பொறியாளர் ஜார்ஜ் வில்லியம் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் நடுகல் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து க.மோகன் காந்தி கூறியதாவது:-

3 உருவங்கள்

திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் பிரதான சாலையில் 5 கி.மீ தொலைவில் உள்ளது பஞ்சனம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பாப்பாத்தி அம்மன் வட்டத்தில் டாக்டர் வினோதினியின் நிலத்திற்கு அருகே விஜய நகர காலத்து நடுகல் ஒன்றை எங்கள் ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது. இந்த நடுகல் 2.7 அடி உயரமும், 2.7 அடி அகலமும் கொண்ட அழகிய பலகைக் கல்லில் மூன்று உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

நடுவில் வீரனின் தோற்றம் காணப்படுகிறது. வீரனின் தோற்றம் மேல்வாரி முடிக்கப்பட்ட கொண்டை, காதுகளில் பெரிய காதணிகள், கழுத்தில் 4 அடுக்கு ஆபரணங்கள், தோளில் அம்புக் கூடு, இடையில் குறுவாள். இடது கையில் நீண்ட வாளைத் தாங்கியுள்ளார். கையில் வில் ஒன்றைத் தரையில் ஊன்றியபடி நிற்கிறார். கைகளில் கடகங்கள், கால்களில் வீரக் கழல்கள் என வீரம் செறிந்த தோற்றத்துடன் நடுகல் வீரன் காட்சித் தருகிறார்.

வீர மரணம்

வீரனின் இருபுறமும் இரண்டு மங்கையர் நிற்கின்றனர். வலது பக்கம் நிற்கும் மங்கை தனது வலது கையை தொங்க விட்டப்படியும், இடது கையில் குடம் ஒன்றை ஏந்தியப்படியும், இடது பக்கம் வாரி முடிக்கப்பட்ட கொண்டையுடன் காட்சித் தருகிறார்.

வீரனின் இடது பக்கம் நிற்கும் பெண் உருவம் வலது கைவிரல்களை நீட்டியபடியும், இடது கையானது இடுப்பின் மேல் வைக்கப்பட்ட கோலத்திலும், இடது பக்கம் வாரி முடிக்கப்பட்ட கொண்டையோடும் காட்சித் தருகிறார். விஜய நகர காலத்தில் திருப்பத்தூர் பகுதியில் நடைபெற்ற போரில் வீர மறவன் ஒருவன் வீர மரணம் அடைந்துள்ளான். அவனது இரு மனைவியரும் இறந்த வீரனோடு தாங்களும் உயிரை விட்டு உடன் கட்டை ஏறியுள்ளதை இந்த நடுகல் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story