ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் நோய் தடுப்பு ஒத்திகை
புதிய வகை கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து, ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் நோய் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
ஊட்டி,
புதிய வகை கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து, ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் நோய் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
கொரோனா வைரஸ்
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் 3 ஆண்டுகளாக உலக நாடுகளை பீதியில் வைத்திருக்கிறது. தொற்று பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். கொரோனா வைரஸ் உருமாறி பரவி வருவதால் அச்சுறுத்தல் அதிகரித்து உள்ளது. குறிப்பாக சீனா மற்றும் ஜரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது.
இதனால் மீண்டும் கொரோனாவால் பேரிடர் ஏற்படாதவாறு மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக கொரோனாவால் ஏற்படும் எத்தகைய நெருக்கடிகளையும் எதிர்கொள்ள தயாராகும் வகையில், நோய் தடுப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி நேற்று நாடு முழுவதும் ஒத்திகை நடந்தது.
நோய் தடுப்பு ஒத்திகை
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் நோய் தடுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. இதன் மூலம் நீலகிரியில் கொரோனா ஏற்பட்டால் அதை தடுக்க தேவையான அளவு மருத்துவ வசதிகள், படுக்கை வசதிகள், ஆக்சிஜன், டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பது குறித்து பொதுமக்களுக்கு காட்டப்பட்டு உள்ளது. முழு பாதுகாப்பு கவச உடைகள் அணிந்து பணியாளர்கள், டாக்டர்கள் தயார் நிலையில் இருந்ததோடு, நோயாளிகளை சிகிச்சைக்கு கொண்டு வருவது போன்ற ஒத்திகையில் ஈடுபட்டனர். இதுகுறித்து டீன் மனோகரி கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் தற்போது வரை கொரோனா பாதிப்பு இல்லை. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 ஆக்சிஜன் மற்றும் சுவாசக் கருவிகள் வசதியுடன் கூடிய படுக்கைகளும், 60 சாதாரண படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் 200 படுக்கை வசதி வரை அதிகரித்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஆக்சிஜன் அளவு 15 நாளுக்கு இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார். அப்போது இருப்பிட மருத்துவ அதிகாரி ரவிக்குமார், துணை மருத்துவ இருப்பிட அதிகாரி மணிகண்டன் உடனிருந்தனர்.