கோழிகளுக்கு வெள்ளைகழிச்சல் நோய் தடுப்பூசி போட வேண்டும்


கோழிகளுக்கு வெள்ளைகழிச்சல் நோய் தடுப்பூசி போட வேண்டும்
x

கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி போட வேண்டும் என பண்ணையாளர்களுக்கு வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நாமக்கல்

மழைக்கு வாய்ப்பு இல்லை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 4 நாட்கள் வானம் தெளிவாக காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 66.2 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு முறையே 4,4,9,8 கி.மீ.வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 20 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் கடந்த வாரம் கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் வெள்ளை கழிச்சல் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்து இருப்பது தெரியவந்து உள்ளது.

தடுப்பூசி போட வேண்டும்

எனவே பண்ணையாளர்கள் கோழிப்பண்ணைகளில் தகுந்த உயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும். மேலும் வெள்ளை கழிச்சல் நோய்க்கான ஊநீர் பரிசோதனை செய்து அதற்கு ஏற்றவாறு சீரான இடைவெளியில் வெள்ளை கழிச்சல் தடுப்பூசி போட வேண்டும்.

மேலும் வரும் வாரங்களில் பகல் நேர வெப்பநிலை திடீரென உயர வாய்ப்பு உள்ளதால், கோழிகள் வெப்ப அயற்சிக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. எனவே பண்ணையாளர்கள் தகுந்த குளிர்விப்பான் மற்றும் விட்டமின் சி போன்ற அயற்சி நீக்க தடுப்பு முறைகளை கையாள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story