டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்ற 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம்


டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்ற 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம்
x

கோட்டூர் அருகே டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்ற 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருவாரூர்

கோட்டூர்:

கோட்டூர் அருகே டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்ற 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கூடுதல் விலைக்கு மது விற்பனை

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே விக்ரபாண்டியம் கடை தெருவில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளர்களாக திருவாரூர் அருகே உள்ள குன்னியூரை சேர்ந்த விஸ்வநாதன்(வயது 45), கூத்தாநல்லூர் அருகே மாறங்குடிைய சேர்ந்த அச்சுதமேனன்(40) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

இந்த கடையில் மதுபாட்டில்களை அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்றதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுப்பிரியர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள், விஸ்வநாதன் மற்றும் அச்சுதமேனனை டாஸ்மாக் கடைக்குள் வைத்து பூட்டினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரபாண்டியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து டாஸ்மாக் கடையை திறந்து விற்பனையாளர்களை வெளியே அழைத்து வந்தனர்.

பின்னர் மதுப்பிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மதுப்பிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

2 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்ற ஊழியர்கள் விஸ்வநாதன், அச்சுதமேனன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மேலாளர் சக்தி பிரேம் சந்தர் உத்தரவிட்டார்.


Next Story