2 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடை நீக்கம்
குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி 2 கிராம நிர்வாக அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வு
அரியலூர் மாவட்டம், மேலப்பழுவூர் மற்றும் பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுண்ணாம்புக்கல் மற்றும் கிராவல் மண் எடுத்து செல்லக்கூடிய லாரிகள் அதிவேகத்தில் செல்வதாகவும், அதிக பாரம் மற்றும் தார்ப்பாய் போடாமல் செல்வதாகவும் தொடர்ந்து வந்த புகாரின் பேரில் அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் அப்பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மேலப்பழுவூர் அருகே சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்தபோது அதிக பாரம் ஏற்றிக்கொண்டு தார்ப்பாய் போடாமல் வந்தது தெரிய வந்தது. மேலும் சுண்ணாம்புக்கல் எடுத்து செல்வதற்கான உரிய அனுமதி இல்லாததை அறிந்த கோட்டாட்சியர் லாரியை பறிமுதல் செய்து கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பணியிடை நீக்கம்
அதேபோல் பூண்டி கிராமத்தின் வழியாக கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்ததில், அதிகபாரம் ஏற்றிக்கொண்டு தார்ப்பாய் போடாமல் வந்தது மற்றும் உரிய அனுமதி இல்லாதது தெரியவந்தையடுத்து அந்த லாரியையும் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் இது குறித்து மேலப்பழுவூர் கிராம நிர்வாக அலுவலர் ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் பூண்டி கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரிடம் கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 லாரிகளுக்கும் அபராதம் விதித்து லாரியை விடுவித்தனர். கிராம நிர்வாக அலுவலர்கள் உரிய அனுமதி இன்றி பாரம் ஏற்றி வந்தது குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை என அறிந்த அரியலூர் கோட்டாட்சியர் முறையான புகார் அளிக்காதது, குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்தது என கூறி 2 கிராம நிர்வாக அலுவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்