கதீட்ரல் சாலையில் உள்ள நிலம் தொடர்பாக தோட்டக்கலை சங்கம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி


கதீட்ரல் சாலையில் உள்ள நிலம் தொடர்பாக தோட்டக்கலை சங்கம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
x

கதீட்ரல் சாலையில் உள்ள சுமார் ரூ.800 கோடி மதிப்புள்ள 114 கிரவுண்ட் நிலம் தொடர்பாக தோட்டக்கலை சங்கம் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை, அண்ணா மேம்பாலத்தை ஒட்டியுள்ள கதீட்ரல் சாலையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அ.தி.மு.க., பிரமுகரான தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர், தோட்டக்கலைச் சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கி அந்த நிலத்தை பயன்படுத்தி வந்தார். இந்த நிலத்தை மீட்க கடந்த 1989-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என தீர்ப்பளித்தது.

இதையடுத்து, அங்கு குத்தகை அடிப்படையில் செயல்பட்ட 'டிரைவ்- இன்' ஓட்டல் வசம் இருந்த 20 ஏக்கர் நிலத்தை மீட்ட தமிழ்நாடு அரசு, தோட்டக்கலைத்துறை சார்பில் செம்மொழிப் பூங்கா அமைத்தது.

இந்த நிலத்துக்கு எதிரில் சுமார் ரூ.800 கோடி மதிப்புள்ள 114 கிரவுண்ட் நிலம் தோட்டக்கலை சங்கத்திடமே தொடர்ந்து இருந்து வந்தது.

கலெக்டர் உத்தரவு

இந்த நிலம் தோட்டக்கலை சங்கத்துக்கு சொந்தமானது என அப்போதைய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதனால், இந்த நிலத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் நில நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளர் இதுதொடர்பாக தாமாக முன்வந்து மாவட்ட கலெக்டர் உத்தரவை நிறுத்தி வைத்தும், அந்த உத்தரவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்றும் தோட்டக்கலை சங்கத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்தார்.

இந்த நோட்டீசை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் தரப்பில் கடந்த 2011-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கில் தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் புவனேஷ்குமார், தன்னை இடையீட்டு மனுதாரராக இணைத்துக் கொண்டார்.

ரூ.800 கோடி மதிப்பு

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புவனேஷ்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், 'அ.தி.மு.க., ஆட்சியில் மாவட்ட கலெக்டராக பொறுப்பு வகித்த அந்த அதிகாரி, யாரையோ திருப்திபடுத்தும் நோக்கில் சுமார் ரூ.800 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தனியார் தோட்டக்கலைச் சங்கத்துக்கு தாரை வார்த்து, பட்டா மாறுதலும் செய்து கொடுத்து விட்டார். சரியான நேரத்தில் நில நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த உத்தரவை நிறுத்தி வைத்ததால் அரசு நிலம் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த நிலத்தை மீட்கும் விவகாரத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்" என்று வாதிட்டார்.

தள்ளுபடி

தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் தலைமை வக்கீல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, "தோட்டக்கலை சங்கத்துக்கும் இந்த நிலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த உரிமையும் இல்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, தோட்டக்கலை சங்கம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story