ஓட்டல் சமையல் அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிய வழக்கு தள்ளுபடி


ஓட்டல் சமையல் அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிய வழக்கு தள்ளுபடி
x

சுத்தமான உணவு தயாரிக்கப்படுகிறதா? என்பதை தெரிந்துக்கொள்ள ஓட்டல்களின் சமையல் அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எஸ்.நடராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "உலகம் முழுவதும் ஓட்டல் தொழில் அதிவேகமாக முன்னேறி வருகிறது. ஆனால், அங்கு தரமான உணவு தயாரிக்கப்படுகிறதா? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஓட்டல்களில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஆய்வு நடத்தியதில் பல ஓட்டல்களில் உணவின் தரம் மிகவும் குறைவாக இருந்ததாக கூறியுள்ளது.

பல ஓட்டல்களில் சமையல் அறை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இல்லை. இதனால், உணவு விஷமாகி உயிர் பலி ஏற்படுகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓட்டலில் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான ஓட்டல்களின் சமையலறையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி உணவு சமைப்பதை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக உணவு சமைப்பதை வாடிக்கையாளர்கள் பார்க்கும் வகையில் ஒளிபரப்ப வேண்டும்" என்று கூறியிருந்தார்.

சுத்தம் இல்லை

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.பவித்ரா ஆஜராகி, "ஓட்டல்களில் தரமான உணவு சமைக்கப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்வது நுகர்வோரின் உரிமை ஆகும். தரமான உணவுதான் நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது என்பதை உறுதிசெய்ய வேண்டும். பல ஓட்டல்களில் சமையலறைகள் குறைந்தபட்ச அளவில் கூட சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இல்லை. அங்கு அதிகாரிகள் சோதனை நடத்தவும், உணவு தரமாக தயாரிக்கப்படுவதை நுகர்வோர் தெரிந்துக்கொள்ள கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டார்.

சாத்தியம் இல்லை

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை ஊரின் தன்மைக்கேற்ப பல வகையான ஓட்டல்கள் உள்ளன. அந்த ஓட்டல்களில் கேமரா பொருத்துவது என்பது சாத்தியம் இல்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story