வழக்கை முறையாக விசாரிக்காத இன்ஸ்பெக்டர், பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்


வழக்கை முறையாக விசாரிக்காத இன்ஸ்பெக்டர், பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநங்கை தற்கொலைக்கு முயன்றார். இந்த வழக்கை முறையாக விசாரிக்காத இன்ஸ்பெக்டர், பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரத்தை மாவட்டம் கெடார் அருகே உள்ள சூரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மரியநாதன் மகன் ராஜா(வயது 22). இவர் கடந்த 23-ந் தேதி இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி, மோகன்தான் காரணம் என்றும், அவரை கைது செய்யக்கோரியும் ராஜாவின் குடும்பத்தினர், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ராஜாவின் மரணத்துக்கு இழப்பீடு கேட்டு அவரது உடலை குடும்பத்தினர் வாங்க மறுத்ததால் அவரது உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி மூர்த்தி, மோகன் ஆகியோரை கைது செய்தனர்.

திருநங்கை தற்கொலை முயற்சி

இதனிடையே விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகரை சேர்ந்த பிரதீப்ராஜ் என்கிற அனன்யா (19) என்ற திருநங்கை கடந்த 25-ந் தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருநங்கையின் தாய் ரமணி, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரில் அனன்யாவும், ராஜாவும் ஒருவரையொருவர் காதலித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். இவர்களது திருமணத்துக்கு ராஜாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ராஜா தற்கொலை செய்துகொண்டார். இதில் மனமுடைந்த அனன்யாவும் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பணியிடை நீக்கம்

இந்நிலையில் ராஜாவின் பெற்றோர், உறவினர்கள், புகழேந்தி எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து அரசிடம் இருந்து இழப்பீடு பெற்றுத்தருமாறு கூறினர். அதற்கு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அவர் கூறினார். இதையடுத்து 4 நாட்களுக்கு பிறகு ராஜாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வாலிபர் தற்கொலை வழக்கில் முறையாக விசாரணை நடத்தாமல் 2 பேரை கைது செய்ததாகவும், இந்த வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட கஞ்சனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், கெடார் சப்-இன்ஸ்பெக்டர் சுதா ஆகிய இருவரையும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி.க்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், கெடார் சப்-இன்ஸ்பெக்டர் சுதா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் நேற்று முன்தினம் இரவு உத்தரவிடடார்.

இன்ஸ்பெக்டரின் மனைவி தர்ணா

இது பற்றி தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரின் மனைவி சரஸ்வதி, தனது 15 வயதுடைய மகளுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே அவரிடம் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சரஸ்வதி, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் எனது கணவர் பணியாற்றும்போதே உயர் அதிகாரிகளால் பல்வேறு இன்னல்களை சந்தித்தார். தற்போது வாலிபர் தற்கொலை வழக்கில் எந்த தவறும் செய்யாத எனது கணவரை பழிவாங்கும் வகையில் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். எனவே எனது கணவருக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

கத்தியால் கழுத்தை அறுக்க முயன்றார்

இதற்கிடையே இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தனது காரில் விரைந்து வந்தார். அவர், தனது மனைவியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அழைத்து செல்ல முயற்சி செய்தார். அப்போது சரஸ்வதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதைபார்த்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி கத்தியை பிடுங்கினர். தொடர்ந்து போலீசார், சரஸ்வதியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story