தானியங்கி எந்திரங்கள் மூலம் மதுபானங்கள் விற்க தடை கோரிய மனு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு


தானியங்கி எந்திரங்கள் மூலம் மதுபானங்கள் விற்க தடை கோரிய மனு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு
x

தானியங்கி எந்திரங்கள் மூலம் மதுபானங்கள் விற்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் ராம்குமார் ஆதித்தன், வக்கீல். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நாட்டில் பல்வேறு குற்றங்களுக்கு மதுபானம் தான் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. சமீப காலங்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும், பெண்களும் மதுஅருந்துவது கவலை அளிக்கிறது.

தமிழக அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், 15 முதல் 17 வயதுடைய மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 50 சதவீதம் பேர் மதுஅருந்துவது தெரியவந்துள்ளது.

தடை விதிக்க வேண்டும்

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, 21 வயது பூர்த்தியடையாதவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. இதை மீறி 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுவிற்றவர்கள் தண்டிக்கப்படவில்லை.

சென்னையில் 4 இடங்களில் தானியங்கி மது விற்பனை எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 800 இடங்களில் இந்த எந்திரங்களை அமைக்க உள்ளதாக தெரிகிறது.

இது, மாணவர்கள் எளிதில் மதுவை பெற வகை செய்துவிடும். எனவே, தானியங்கி எந்திரங்கள் மூலம் மதுபானங்கள் விற்க தடை விதிக்க வேண்டும்.

சிறையில் அடைக்க வேண்டும்

21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யும் விற்பனையாளர்களை தண்டிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு மதுபானம் விற்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு எதிராக வழக்கு பதிந்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

தள்ளுபடி

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, சரவணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'டாஸ்மாக் கடைகளுக்குள் தான் தானியங்கி விற்பனை எந்திரங்கள் அமைக்கப்பட உள்ளது. தானியங்கி விற்பனை எந்திரங்கள் மூலம் யார் வேண்டுமானாலும் மதுபானம் வாங்கலாம் என்பது தவறான பிரசாரம். தானியங்கி மது விற்பனை எந்திரங்களில் மதுபாட்டில்கள் பெற வருபவர்களை கண்காணிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்கப்பட மாட்டாது. இதுசம்பந்தமாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது' என்றார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவில் எந்த தகுதியும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story