சாகும் வரை சிறை தண்டனை பெற்ற கைதியின் ஜாமீன் மனு தள்ளுபடி


சாகும் வரை சிறை தண்டனை பெற்ற கைதியின் ஜாமீன் மனு தள்ளுபடி
x

டெல்லி இளம்பெண் கும்பகோணத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாகும் வரை சிறை தண்டனை பெற்ற கைதியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை

மதுரை,

டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. இதற்காக அவர் டெல்லியில் இருந்து ரெயில் மூலம் கும்பகோணம் வந்தார். அப்போது நள்ளிரவு 11 மணிக்கு மேல் ஆனதால் விடுதி அறையில் தங்குவதற்கு திட்டமிட்டு, அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறினார். ஆனால் பாதி வழியிலேயே இளம்பெண்ணை ஆட்டோ டிரைவர் இறக்கிவிட்டு சென்றுவிட்டார். அப்போது அந்த பெண்ணை குடிபோதையில் இருந்த 4 பேர் ஓட்டலில் விடுவதாக அழைத்து சென்று பலாத்காரம் செய்தனர்.

இதை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வங்கி அதிகாரிகள் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, புருஷோத்தமன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கை தஞ்சாவூர் மாவட்ட மகளிர் கோர்ட்டு விசாரித்தது. முடிவில் குற்றவாளிகளான தினேஷ், புருஷோத்தமன், வசந்தகுமார், அன்பரசன் ஆகிய 4 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. அவர்கள் 4 பேரும் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து அவர்கள் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளதால் தண்டனையை நிறுத்திவைத்து தனக்கு ஜாமீன் கேட்டு புருஷோத்தமன், மற்றொரு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மனுதாரருக்கு ஜாமீன் தர மறுத்து விட்டனர். பின்னர் இந்த மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததால், இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story