செய்தி சிதறல்


செய்தி சிதறல்
x

செய்தி சிதறல்

திருச்சி

புகார் மீது சரியாக விசாரணை நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவிட்டார்.

தற்கொலை முயற்சி

திருச்சியை அடுத்த பெட்டவாய்த்தலை பகுதியை சேர்ந்தவர் முத்தாத்தாள். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வீடு விலைக்கு வாங்குவது தொடர்பாக ரூ.8 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளார். இது தொடர்பாக அவர் பெட்டவாய்த்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

ஆனால், அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மனம் உடைந்த முத்தாத்தாள் கடந்த 25-ந்தேதி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தபோது, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

ஆயுதப்படைக்கு மாற்றம்

இதைத்தொடர்ந்து முத்தாத்தாள் மனு மீது முறையாக விசாரணை நடத்தவில்லை என ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, பெட்டவாய்த்தலை சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவிட்டார்.

விபசார புரோக்கர் கைது

*திருச்சி கே.கே.நகர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மசாஜ் சென்டரில் (ஸ்பா) விபசாரம் நடப்பதாக கொடுங்குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கருணாகரனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து விபசார தொழில் செய்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கு விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 29 வயது பெண்ணை மீட்ட போலீசார், அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுதொடர்பாக மணிகண்டத்தை சேர்ந்த புரோக்கர் லோகநாதன் (28) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

டிரைவர் சாவு

*கிருஷ்ணகிரி மாவட்டம் ரெட்டியப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (34). திருச்சியில் உள்ள ஒரு வாடகைக்கார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த செல்வி (28) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் ராஜா, தனது காரில் வாடிக்கையாளர் ஒருவரை ஏற்றிக்கொண்டு ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து சென்றார். அங்கு வாடிக்கையாளர் கோவிலுக்குள் சென்றுவிட்டு திரும்பி வந்த போது, காரில் ராஜா மயங்கிய நிலையில் படுத்துகிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு ராஜாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி தற்ெகாலை

*திருச்சி தென்னூர் இதாயத் நகரை சேர்ந்தவர் சர்புதீன் (44). தொழிலாளி. இவருடைய தங்கை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சர்புதீன் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சர்புதீன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில் மோதி முதியவர் பலி

*திருச்சி மேலகல்கண்டார்கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (81). இவர் நேற்று மாலை 3.30 மணி அளவில் பொன்மலை - அரியமங்கலம் ரெயில்வே தண்டவாள பகுதியில் நடந்து சென்றார். அப்போது, வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story