பழனி-சவரிக்காடு மலைப்பாதையில் 250 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்
பழனி-சவரிக்காடு மலைப்பாதையில் 250 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டன.
பழனி வனத்துறை சார்பில் பழனி-சவரிக்காடு மலைப்பாதையில் சாலையோரம் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. வனச்சரகர் பழனிக்குமார், வனவர் சங்கர் தலைமையில் வன பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். பழனி தேக்கந்தோட்டம் பகுதியில் இருந்து சவரிக்காடு வரையில் மலைப்பாதை ஓரம் கிடந்த பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் என சுமார் 250 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் மதுபாட்டில்கள் அகற்றப்பட்டன.
இதுகுறித்து வனச்சரகர் பழனிக்குமார் கூறுகையில், பழனி வனப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள், அரியவகை மரங்கள் உள்ளன. வனப்பகுதி வழியாக செல்லும் பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பிளாஸ்டிக் குப்பைகள், மதுபாட்டில்களை வனப்பகுதியில் வீசக்கூடாது, புகைப்பிடிக்க கூடாது என்று சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.
ஆனால் அதை பொருட்படுத்தாமல் சிலர் வனப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் வீசுகின்றனர். இதனால் வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன. எனவே வனப்பகுதியில் உணவு பிளாஸ்டிக் பாட்டில்களை வீசுவோர் மீது வனச்சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.