டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கபழைய டயர்கள் அகற்றம்
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பழைய டயர்கள் அகற்ற நாமக்கல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தற்போது பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் டெங்கு காய்ச்சல் மற்றும் பல்வேறு வகையான காய்ச்சல்கள் பரவும் நிலை உள்ளது. எனவே டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நாமக்கல் நகராட்சி ஆணையாளர் செண்ணு கிருஷ்ணன் உத்தரவுபடி நகர பகுதிகளில் உள்ள பழைய டயர்களை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இதில் 50 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
லாரி பட்டறைகள் அதிகமாக உள்ள சேலம் ரோட்டில் பொது இடங்களில் இருந்த டயர்கள் நகராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது. மேலும் ஒரு சில இடங்களில் இருந்த டயர்களை மழைநீர் தேங்காத வண்ணம் உள்பகுதியில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் சேந்தமங்கலம் ரோடு, குட்டை தெரு, துறையூர் ரோடு, திருச்சி ரோடு, மோகனூர் ரோடு, பரமத்தி ரோடு, திருச்செங்கோடு ரோடு, பொய் ஏரிக்கரை சாலை பகுதிகளிலும் டயர்களை அகற்றும் பணி தூய்மை பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த டயர்கள் அகற்றும் பணி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், பாஸ்கர் மற்றும் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் மேற்பார்வையில் நடந்தது. பழைய பொருட்கள் சேகரிக்கும் கடைகளில் உள்ள பொருட்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும். நகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு கொசுபுழுக்கள் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.