தலையாம்பள்ளத்தில் தேங்கி இருந்த கழிவுநீர் அகற்றம்
தலையாம்பள்ளத்தில் தேங்கி இருந்த கழிவுநீர் அகற்றப்பட்டது.
வாணாபுரம்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தலையாம்பள்ளம் கிராமம். இங்கு தெற்கு தெரு பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்தை சுற்றிலும் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வருபவர்கள் கடும் சிரமப்பட்டனர். மேலும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து தற்காலிகமாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கழிவுநீர் தேங்கி இருப்பதை அகற்ற வேண்டும் என்று கடந்த 13-ந் தேதி தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது.
இதனையடுத்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் தேங்கி நிற்பதை அகற்றிவிட்டு அதில் சுற்றிலும் சுவர் அமைத்து ஜல்லிகள் கொட்டி கழிவுநீர் உறிஞ்சி பூமிக்கு அடியில் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதிகளில் கழிவுநீர் தேங்காதவாறு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.