கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே பிரச்சினை


கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே பிரச்சினை
x

ரிஷிவந்தியம் அருகே பரபரப்பு கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே பிரச்சினை பதற்றம்-போலீஸ் குவிப்பு

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் அருகே பிரிவிடையாம்பட்டு கிராமத்தில் உள்ள பெரியாயி அம்மன் கோவில் திருவிழாவில் ஒரு சமூகத்தினர் நேற்று முப்பூசை விழாவும், நேற்று முன்தினம் இரவு சாமி வீதி உலாவும் நடத்த ஏற்பாடு செய்தனர். ஆனால் வழிபாட்டில் வழக்கத்துக்கு மாறாக எந்த நிகழ்ச்சிகளும் நடத்த கூடாது என, கடந்த மாதம் சங்கராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த சமாதான பேச்சு வார்த்தையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக சாமி வீதிஉலா நடைபெறுவதாக கூறி, அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுபற்றிய தகவலறிந்து திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் விரைவந்து வந்து இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, நள்ளிரவு 12.30 மணியளவில் சாமி வீதிஉலா ரத்து செய்யப்பட்டது. மேலும் இதே கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று நடைபெற இருந்த சாகை வார்த்தல் நிகழ்ச்சியையும் ரத்து செய்ய வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து அங்கு வந்த ரிஷிவந்தியம் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் இரு தரப்பினர் முன்னிலையில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணலாம் என கூறினார். இதை ஏற்று இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story