பூட்டிய கடையில் சிகரெட் கேட்டு தகராறு: முதியவர்களை தாக்கிய வாலிபர் கைது


பூட்டிய கடையில் சிகரெட் கேட்டு தகராறு: முதியவர்களை தாக்கிய வாலிபர் கைது
x

பூட்டிய கடையில் சிகரெட் கேட்டு தகராறு செய்து முதியவர்களை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா (வயது 67). இவரது மனைவி அன்னக்கொடி. இவர்கள் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு இருவரும் கடை வாசலில் கட்டிலில் படுத்து தூங்கியுள்ளனர். நள்ளிரவில் அங்கு வந்த பனங்குளம் தெற்கு கனகசிவம் மகன் விக்ரம் (20), ஆவணத்தான்கோட்டை ஆறுமுகம் மகன் ராஜதுரை (20), சிட்டங்காடு ரவி மகன் சசிசுதன் (22) ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து சிகரெட் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர்கள் சிகரெட் இல்லை என்று கூறியதால் முதியவர்களை தாக்கியதோடு கட்டிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு உள்ளனர். மேலும் கடையிலிருந்த காலி சோடா பாட்டில்களை உடைத்து ரகளை செய்ததுடன் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் உடைந்த பாட்டில் விக்ரம் காலில் குத்தி காயமடைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோட்டார் சைக்கிள் மற்றும் அரிவாளை கைப்பற்றியதுடன் முதியவர்களை தாக்கிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ராஜதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story