கோயம்பேடு மார்க்கெட்டில் சம்பளத்தை பங்கு பிரிப்பதில் தகராறு; தொழிலாளி மீது தாக்குதல்


கோயம்பேடு மார்க்கெட்டில் சம்பளத்தை பங்கு பிரிப்பதில் தகராறு; தொழிலாளி மீது தாக்குதல்
x

கோயம்பேடு மார்க்கெட்டில் சம்பளத்தை பங்கு பிரிப்பதில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய தொழிலாளியை கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் திருவேற்காடு, கருமாரி அம்மன் நகரைச் சேர்ந்த ரங்கசாமி (வயது 38) மற்றும் கொடுங்கையூரை சேர்ந்த தியாகராஜன் (27) ஆகியோர் முட்டை தூக்கும் கூலி வேலை செய்து வருகின்றனர். இருவரும் தினமும் வேலை செய்துவிட்டு அதில் வரும் சம்பள பணத்தை இரவில் பிரித்து கொள்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு இருவரும் வேலை செய்து விட்டு அதில் வந்த கூலி பணத்தை பங்கு பிரித்தனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தியாகராஜன், திடீரென ரங்கசாமியை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ரங்கசாமி மயங்கி விழுந்தார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் ரங்கசாமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story