சக பயணிகளுடன் தகராறு: கோவை-மதுரை இன்டர்சிட்டி ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது


சக பயணிகளுடன் தகராறு: கோவை-மதுரை இன்டர்சிட்டி ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
x

சக பயணிகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோவை-மதுரை இன்டர்சிட்டி ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை


சக பயணிகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோவை-மதுரை இன்டர்சிட்டி ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

வெடிகுண்டு மிரட்டல்

மதுரை ரெயில்வே போலீசாருக்கு சில நாட்களுக்கு முன்பு மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரு தகவல் வந்தது. அதில், கோவையில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு மதுரை வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக செல்போன் மூலம் மிரட்டல் வந்ததாக கூறப்பட்டது. அதன்படி, அன்றையதினம் இரவு மதுரை வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆகியோர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ரெயிலில் வெடிகுண்டு ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, மிரட்டல் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்த எண்ணை கொண்டு விசாரணை நடத்தினர்.

இதற்காக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துமுனியாண்டி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

கைது

தனிப்படை போலீசாரின் விசாரணையில், மேலூர் வெள்ளலூர் கட்டசோலைபட்டி சேகர் மகன் போஸ் (வயது 35) என்பவர், ரெயிலுக்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, மேலூர் பஸ் நிலையம் அருகே சுற்றித்திரிந்த அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

அப்போது, இன்டர்சிட்டி ரெயிலில் பயணம் செய்த சக பயணிகளுக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்களை போலீசில் சிக்க வைத்து விடலாம் என நினைத்து வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் சொல்லி மிரட்டியதாகவும் தெரியவந்தது. அவர் மீது பொய்யான தகவல் அளித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், போஸ் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Related Tags :
Next Story