கோவில்பட்டி வள்ளிநாயகிபுரம் கூட்டுறவு சங்க நிர்வாககுழு கலைப்பு


கோவில்பட்டி வள்ளிநாயகிபுரம் கூட்டுறவு சங்க நிர்வாககுழு கலைப்பு
x

கோவில்பட்டி வள்ளிநாயகிபுரம் கூட்டுறவு சங்க மோசடியை தொடர்ந்து, சங்க நிர்வாகக்குழு கூண்டோடு கலைக்கப்பட்டு உள்ளதாக, தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துகுமாரசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி வள்ளிநாயகிபுரம் கூட்டுறவு சங்க மோசடியை தொடர்ந்து, சங்க நிர்வாகக்குழு கூண்டோடு கலைக்கப்பட்டு உள்ளதாக, தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துகுமாரசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மோசடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சரகம் வள்ளிநாயகிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கையிருப்பை குறைக்கும் வகையில் நகைக்கடன் வழங்கியதாக போலி கணக்கு எழுதி கையாடல் செய்ததாகவும், போலியாக வழங்கிய நகைக்கடன்களை முடிவு கட்டி பணத்தை சங்க கணக்குக்கு கொண்டு வராமலும், நகைப்பெட்டகத்தில் உள்ள நகையின் இருப்பு குறைவு ஏற்படுத்தியும், முறையற்ற வகையில் கடன் வழங்கியும் சங்கத்துக்கு ரூ.85 லட்சம் நிதி இழப்பு ஏற்படுத்தியதாக புகார்கள் வந்தன. அதன்பேரில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 81-ன் கீழ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சங்கத்தின் செயலாளர் வேல்முருகன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கலைப்பு

மேலும் சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு, சங்கத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியும், கடமையை செய்ய தவறியும், சங்க நலன் மற்றும் உறுப்பினர் நலனுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் சங்க அலுவலர்களை தவறாக நிர்வகித்தும், நிதி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுநலன் கருதியும், கூட்டுறவு சங்க நலன் மற்றும் உறுப்பினர்களின் நலன் கருதி 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சட்டப்பிரிவு 88-ன் கீழ் வள்ளிநாயகிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் நிர்வாகக்குழு கலைக்கப்பட்டது. தொடர்ந்து சங்கத்தின் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க செயலாட்சியராக அக்னிமுத்துராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story