ரேஷன் கடையில் மக்கிப்போன பருப்பு வினியோகம்
கலவை அருகே ரேஷன் கடையில் மக்கிப்போன பருப்பு வினியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மக்கிப்போன பருப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த பென்னகர் மேட்டுகாலனி பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இரண்டு மாதத்திற்கு முன்புதான் இந்த பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று மாலை ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பருப்பு மக்கி கட்டியாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் எங்களுக்கு இந்த பருப்பு வேண்டாம், அடுத்த மாதம் சேர்த்து வழங்குங்கள் என கேட்டனர்.
வாக்குவாதம்
இதனால் ரேஷன் கடை விற்பனையாளருக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரேஷன் கடை விற்பனையாளர், எங்களுக்கு இந்த பருப்புதான் வந்துள்ளது. அதைத்தான் கொடுக்க முடியும் என்று கூறினார்.
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான பருப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.