4 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம் செய்யும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
குடற்புழு நீக்க மாத்திரை
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் நடந்தது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரையை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அல்பெண்டாசோல் குடற்புழு நீக்க மாத்திரை உங்கள் உடம்பில் இரும்புச்சத்து உறிஞ்சுவதை அதிகப்படுத்தும். இதன் மூலம் இரும்பு சத்து அதிகமாக உடலுக்கு கிடைக்கும்.
சிறுதானிய உணவு
இத்திட்டத்தின் கீழ் ஒரு வயது முதல் 19 வயதுவரை உள்ளவர்களுக்கும், 20 வயது முதல் 30 வயதுவரை உள்ள பெண்களுக்கும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 14 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள்.
அனைவரும் ஆரோக்கியமான உணவுகள், பழங்கள், காய்கறிகள், சிறுதானிய உணவுகளை உணவுகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நம்முடைய பாரம்பரிய உணவுகள் ஆகும். பாரம்பரிய உணவுகள் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். தகுதியுள்ள அனைவரும் இலவசமாக குடற்புழு நீக்க
மத்திரைகளை உட்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
4,14,291 பேர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 989 பள்ளிகள், 968 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 162 துணை சுகாதார நிலையங்கள் மூலம் ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள 3,18,417 பேருக்கும், 20 வயது முதல் 30 வயதுவரை உள்ள 95,874 பெண்கள் என மொத்தமாக 4,14,291 பேர் பயன் அடைவார்கள்.
முகாமில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சிதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.