ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம்
கோவை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட ரேஷன் அரிசி தற்போது வினியோகம் செய்யப்படுகிறது.
கோவை
கோவை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட ரேஷன் அரிசி தற்போது வினியோகம் செய்யப்படுகிறது.
ரத்த சோகை
தமிழகத்தில் பொதுமக்களுக்கு ரத்த சோகை பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அதை தடுத்து பொதுமக்களுக்கு சத்தான உணவு வழங்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட ரேஷன் அரிசி வழங்கும் திட்டத்தை கடந்த டிசம்பர் மாதம் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
முதற்கட்டமாக விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட ரேஷன் அரிசி வழங்கப்படுகிறது.
இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
ரேஷன் கடைகள்
இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் பொதுமக்களுக்கு ரத்த சோகை குறைபாடு காணப் படுகிறது.
அதை சரி செய்யும் வகையில் 100 கிலோ புழுங்கல் அரிசி, பச்சரிசியில் போலிக் அமிலம், வைட்டமின் 12 உள்ளிட்ட சத்துக்கள் ஒரு கிலோ அளவுக்கு கலந்து செறிவூட்டப் படும்.
அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 1-ந் தேதி முதல் செறிவூட் டப்பட்ட ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இந்த மாதம் 1,420 ரேஷன் கடைகளில் 16 ஆயிரம் டன் செறிவூட்டப்பட்ட அரிசி பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
இந்த அரிசியை சாப்பிடுவதன் மூலம் ரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படும். கர்ப்பிணிகளின் கரு வளர்ச்சிக்கும் ரத்த உற்பத்திக்கும், நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படவும் செறிவூட்டப்பட்ட ரேஷன் அரிசி உதவும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.