அனைத்து தொழிற்சங்கத்தினர் துண்டுபிரசுரம் வினியோகம்
மத்திய அரசை கண்டித்து நடக்கும் போராட்டம் குறித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் துண்டுபிரசுரம் வினியோகம் செய்தனர்.
பட்டுக்கோட்டை:
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசின் பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்து வருகிற 9-ந்தேதி வெள்ளையனே வெளியேறு தினத்தில், மோடி அரசே வெளியேறு' என்ற முழக்கத்தோடு பெருந்திரள் அமர்வு போராட்டம் நடைபெற உள்ளது. இதனை விளக்கி பட்டுக்கோட்டை பஸ் நிலையம் அருகில், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் பேர்நீதி ஆழ்வார் தலைமையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சி.ஐ.டி.யூ. மாநிலச் செயலாளர் ஜெயபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியச் செயலாளர் கந்தசாமி, தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செல்வம், தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ஞானசூரியன், முருகசரவணன், மோரீஸ்அண்ணாதுரை, ஐ.என்.டி.யூ. ரவிச்சந்திரன், ஏ.ஐ.டி.யூ.விஜயன், தொ.மு.ச. ஆரோக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மணிக்கூண்டு, பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, பெரிய கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.