அறிவிப்போடு நின்றுபோன மாவட்ட மைய நூலகம்
கள்ளக்குறிச்சியில் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் இடம் தேர்வுசெய்யப்படாததால் அறிவிப்போடு நின்று போன மாவட்ட மைய நூலகம் அமைக்கும் பணி எப்போது தொடங்கும் என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்து வருகிறது
கள்ளக்குறிச்சி
முழுநேர கிளை நூலகம்
கள்ளக்குறிச்சியில் காந்தி சாலையில் கடந்த 1967-ம் ஆண்டு கிளை நூலகம் முதல் முறையாக தொடங்கப்பட்டது. வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த நூலகம் பின்னர் முழு நேர கிளை நூலமாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 2-ம் நிலை நூலகர் ஒருவர், 3-ம் நிலை நூலகர் 2 பேர் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நூலகத்தில் அறிவியல், ஆராய்ச்சிகள், மருத்துவம், வரலாறு, கதை, கட்டுரை, கவிதை, காவியம், இலக்கியம், கம்பராமாயணம், மகாபாரதம், புறநானூறு, அகநானூறு, தமிழ் மற்றும் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் என மொத்தம் 49 ஆயிரத்து 300 புத்தகங்கள் உள்ளன. மேலும் போட்டி தேர்வு எழுதுவோர் பயன்பெறும் வகையில் போட்டி தேர்வு தொடர்பாக படிக்க மற்றும் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் கூடிய கணினி வசதியும் உள்ளது. இ்ந்த நூலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். 300 பேர் புரவலர்களாக சேர்ந்துள்ளனர்.
போதிய இடவசதி இல்லை
கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார கிராம பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என தினமும் சுமார் 100 பேர் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு 50 பேர் மட்டுமே அமர்ந்து படிக்கும் வகையில் இட வசதி உள்ளதால் சிலர் நின்று கொண்டும், தரையில் அமர்ந்து கொண்டு படித்தும், குறிப்பெடுத்தும் வருவதை காண முடிகிறது.
கள்ளக்குறிச்சியை தலைநகரமாகக் கொண்டு புதிய மாவட்டம் கடந்த 2019-ம் ஆண்டு உதயமானது. புதிய மாவட்டம் உருவாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் கள்ளக்குறிச்சியில் மாவட்ட மைய நூலகம் இல்லாததால் வாடகை கட்டிடத்தில் செயல்படும் முழு நேர நூலகத்தை மாவட்ட மைய நூலகமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
4 மாடிகளுடன்...
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி உள்பட புதியதாக தொடங்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் ரூ.6 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் மாவட்ட மைய நூலகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நிதி ஒதுக்கி பல மாதங்கள் கடந்து விட்டன.
புதிதாக கட்டப்பட உள்ள மாவட்ட மைய நூலகம் லிப்ட் வசதியுடன் 4 மாடிகளுடன் கட்டப்பட உள்ளது. இதற்கு 40 சென்ட் நிலம் தேவைப்படுகிறது. இடத்தை வருவாய்துறை தேர்வு செய்து கொடுத்தால் பணிகள் உடனடியாக தொடங்கி விடும். ஆனால் இதுவரை இடம் தேர்வு செய்து கொடுக்கவில்லை. இதனால் மாவட்ட மைய நூலகம் அமைக்க நிதி ஒதுக்கி நாளாச்சி, கட்டுமான பணிகள் என்னாச்சு? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுகிறது.
உடனடியாக தொடங்க வேண்டும்
தற்போது இருக்கும் முழுநேர கிளை நூலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. போதிய இடவசதியும் இல்லை. இந்த நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து அந்த பணியும் தொடங்கவில்லை. மாவட்ட மைய நூலகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த பணியும் நடைபெற வில்லை.
எனவே மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் நலன் கருதி நவீன வசதிகளுடன் மாவட்ட மைய நூலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற குரல் பொதுமக்கள் மத்தியில் ஓங்கி ஒலித்து வருகிறது.
கூடுதல் புத்தகங்கள் கிடைக்கும்
இது குறித்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஸ்ரீகாந்த் கூறும்போது, கள்ளக்குறிச்சியில் உள்ள கோட்ட நூலகம் மாவட்ட மைய நூலகமாக தரம் உயர்த்தப்பட்டால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வரவழைக்கப்படும். இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் தற்போதைய நூலகத்தில் இட நெருக்கடியால் படிக்க மற்றும் குறிப்பெடுக்க மிகவும் சிரமமாக உள்ளது. போட்டி தேர்வு எழுதும் ஏழை, எளிய மாணவர்கள் தேர்வுக்கு தயார் ஆக நூலகம் பெரிதும் பயன் உள்ளதாக இருக்கும். தற்போது கள்ளக்குறிச்சியில் மாவட்ட மைய நூலகம் இல்லை. அப்படி செல்ல வேண்டுமானால் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட மைய நூலகத்துக்குத்தான் செல்ல வேண்டி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டமாக உதயமாகி 3 ஆண்டுகளை கடந்த பின்னரும் இன்னும் மாவட்ட மைய நூலகம் இல்லாதது வேதனையாக உள்ளது. இதற்கும் தமிழக அரசு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் இன்னமும் பணிகள் தொடங்கவில்லை. மாணவர்கள், இளைஞர்கள் நலன் கருதி மாவட்ட மைய நூலகம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்றார்.
100-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள்
நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த சுப்பரமணியன் கூறும்போது, கள்ளக்குறிச்சி மாவட்டமாக உருவாகி 3 வருடங்களாகியும் மாவட்ட மைய நூலகமாக தரம் உயர்த்தப்படாமல் கோட்ட நூலகமாகவே உள்ளது. அதுவும் சொந்த கட்டிடம் இல்லாமல் வாடகை கட்டிடத்தில்தான் நூலகம் இயங்கி வருகிறது. போதிய இட வசதியும் இல்லை. பொதுமக்கள் படித்து முழுமையாக பயன்பெறும் வகையில் போதிய அளவு புத்தகங்களும் இல்லை. எனவே இந்த நூலகத்தை மாவட்ட மைய நூலகமாக தரம் உயர்த்த வேண்டும்.