பள்ளிபாளையத்தில்சாயப்பட்டறைகளில் மாவட்ட கலெக்டர் உமா ஆய்வு


பள்ளிபாளையத்தில்சாயப்பட்டறைகளில் மாவட்ட கலெக்டர் உமா ஆய்வு
x
நாமக்கல்

பள்ளிபாளையம்

கலெக்டர் ஆய்வு

பள்ளிபாளையம், குமாரபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பிரதான தொழிலாக விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் உள்ளது. இந்த தொழிலை சார்ந்து 100-க்கும் மேற்பட்ட சாய சலவை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரவு நேரங்களில் சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீர் சாக்கடை வழியே அப்படியே ஆற்றில் கலந்து விடப்படுவதாக நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் தண்ணீர் தரம் குறித்து பரிசோதனை செய்தனர். இதன் பின்னர் காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பது குறித்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார். மேலும் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு கழிவுநீர் வெளியேற்றம் செய்யப்படுகிறதா? அரசின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து வசந்தா நகர் பகுதியில் இயங்கி வரும் சாய ஆலைகளில் கலெக்டர் உமா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஜவுளி நூல் குறித்தும் உரிய விதிமுறைகள் பின்பற்றபடுகிறதா என்பன குறித்தும், சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

விழிப்புணர்வு

பின்னர் இதுகுறித்து கலெக்டர் உமா கூறியதாவது:-

பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் மக்களின் பிரதான தொழிலாக சாயப்பட்டறை தொழில் உள்ளது. சிறு குறு சாய ஆலைகள், நவீன எந்திரங்களை கொண்டு சாயப்பட்டறைகளை ஆய்வு செய்யப்பட்டது. மேலும் சாயப்பட்டறையில் இருந்து வரக்கூடிய நீரானது சுத்திகரிப்பு செய்யப்படாமல் நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முழுமையாக சுத்திகரிப்பு செய்யப்பட்டு சாயக்கழிவு நீரை வெளியேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது நகராட்சி அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், தாசில்தார் கிராம நிர்வாக அலுவலர்கள் என பலர் உடன் இருந்தனர்.


Next Story