மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ஆய்வு
வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ஆய்வு செய்தார். அப்போது நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ள டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
வால்பாறை
வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ஆய்வு செய்தார். அப்போது நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ள டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இணை இயக்குனர் ஆய்வு
கோவை மாவட்ட ஊரக சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர் டாக்டர் மீரா, வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இங்கு உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு உள்பட அனைத்து பிரிவில் உள்ள வசதிகளை பார்வையிட்டார். மேலும் நோயாளிகள் மற்றும் டாக்டர்களுக்கான வசதிகளையும் ஆய்வு செய்தார்.
விபத்து நடந்த இடம்
இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆஸ்பத்திரி முன்பு ஆம்புலன்ஸ் கவிழ்ந்து டிரைவர், நோயாளி உயிரிழந்த சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, விபத்துக்கான காரணம் குறித்து இணை இயக்குனர் மீரா கேட்டறிந்தார். பின்னர் ஆஸ்பத்திரி முன்பு நிறுத்துவதை தவிர்த்து அவசர சிகிச்சை பிரிவு முன்பு ஆம்புலன்சை இடையூறு இன்றி நிறுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க உத்தரவிட்டார்.
விரைவாக கட்டிட பணி
அதன்பிறகு ரூ.9 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் வெளிநோயாளிகள் பிரிவுக்கான புதிய கட்டிட பணியை பார்வையிட்டார். அங்கு டாக்டர்கள் தனித்தனி அறையில் அமர்ந்து நோயாளிகளை பரிசோதனை செய்வதற்கு ஏதுவாக அறைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும், விரைவாக கட்டிட பணிகளை முடித்து தர வேண்டும் என்றும் பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.
அறிவுரை
நோயாளிகளிடம் டாக்டர்கள், பணியாளர்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும், முடிந்தவரை பொள்ளாச்சி, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளை அனுப்பாமல் வால்பாறையிலேயே சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
அப்போது ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் மகேஷ் ஆனந்தி, கட்டிட பணிகள் ஆய்வுக்குழு டாக்டர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.