மாவட்ட அளவிலான திறன் போட்டி தேர்வு

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான திறன் போட்டி தேர்வு நடந்தது
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் மாவட்ட அளவில் திறன் போட்டி தேர்வு நடத்த கடந்த ஜூலை மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்கான தேர்வு மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு மையங்களில் நேற்று காலை 11 மணி முதல் 12 மணி வரை நடந்தது. இதில் செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 93 தேர்வர்களும், தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 207 தேர்வர்களும், தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 162 தேர்வர்களும் தேர்வு எழுதினர். இதனை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவி இயக்குனர் (மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்) ராஜேந்திரன், மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரவி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். சர்வதேச அளவிலான திறன் போட்டிகள் 2024-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் நடைபெற உள்ளது.