மாவட்ட அளவிலான திறனறிவு போட்டித்தேர்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் திறனறிவு போட்டித்தேர்வு நாளை நடக்கிறது என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் திறனறிவு போட்டித்தேர்வு நாளை நடக்கிறது என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திறனறிவு போட்டித்தேர்வு
சர்வதேச அளவிலான திறனறிவு போட்டி தேர்வு 2024-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் நடைபெற உள்ளது. இதையொட்டி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் மாவட்ட அளவில் தேர்வு நடத்த கடந்த ஜூலை மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
திறனறிவு போட்டி தேர்வு மயிலாடுதுறையில் உள்ள செயின்ட்பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி ஆகிய இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது.
குறுஞ்செய்தி
இப்போட்டித் தேர்வுக்காக பதிவு செய்த மாணவ-மாணவிகள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை www.naanmuthalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் தங்களது ஆதார் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள இளைஞர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின் படி உரிய ஆவணங்களுடன், குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு நடைபெறும் இடத்திற்கு சென்று தேர்வு எழுதுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேகங்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் tnskills@naanmudhalvan.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.