மாவட்ட அளவிலான கலை உற்சவ போட்டிகள்


மாவட்ட அளவிலான கலை உற்சவ போட்டிகள்
x

மாவட்ட அளவிலான கலை உற்சவ போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலை உற்சவ போட்டிகள் பெரம்பலூரில் உள்ள மாவட்ட சாரணர் கூட்டரங்கில் கடந்த 2 நாட்களாக நடந்தது. ஏற்கனவே பள்ளி அளவில் மாணவ-மாணவிகளுக்கு படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் வாய்ப்பாட்டிசை, கருவியிசை, நடனம், காண் கலை மற்றும் நாடகம் ஆகிய 5 தலைப்புகளில் நடத்தப்பட்ட கலை உற்சவ போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் மாணவ-மாணவிகளுக்கு வாய்ப்பாட்டிசையில் செவ்வியல், பாரம்பரிய நாட்டுப்புற வகை, காண் கலையில் இரண்டு, மூன்று பரிமாணங்கள், நாடகம் ஆகிய போட்டிகள் தனித்தனியாக நடந்தது. நேற்று கருவியிசையில் தாளவாத்தியம், மெல்லிசை, நடனத்தில் செவ்வியல், பாரம்பரிய நாட்டுப்புற வகை, காண் கலையில் உள்ளூர் தொன்மை பொம்மைகள், விளையாட்டுகள் ஆகிய போட்டிகள் தனித்தனியாக நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் மாநில அளவிலான கலை உற்சவ போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story