மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள்


மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள்
x

மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடந்தன.

பெரம்பலூர்

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளி கல்வித்துறையின் மானிய கோரிக்கையின் போது பள்ளி கல்வித்துறை அமைச்சர், மாணவர்களின் கலை திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்டத்தில் கலை திருவிழா நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி அளவில் 6 முதல் 12-ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கலை திருவிழா போட்டிகள் பள்ளி, வட்டார அளவில் நடத்தி முடிக்கப்பட்டது. வட்டார அளவில் 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு நடத்தப்பட்ட கலை திருவிழாவில் முதல் இடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட கலை திருவிழா போட்டிகள் பெரம்பலூரில் 3 இடங்களில் நேற்று நடந்தது. அவர்களுக்கு பெரம்பலூர் ஸ்ரீமுத்தையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கவின் கலை, நுண்கலை, மொழித்திறன் உள்ளிட்ட கலை போட்டிகளும், பனிமலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இசை வாய்ப்பாடு, கருவி இசை உள்ளிட்ட கலை போட்டிகளும், உப்போடை ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடனம், நாடகம் உள்ளிட்ட கலை போட்டிகளும் நடத்தப்பட்டது.

போட்டிகளை பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாணவ-மாணவிகள் இந்த கலை திருவிழா போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நேற்று முன்தினம் 9, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை மாநில அளவிலான போட்டிகள் நடைபெறவுள்ளது. போட்டியில் வெற்றி பெறும் மாணவருக்கு கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் வழங்கப்பட உள்ளது. மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசையில் முதன்மைப்பெறும் மாணவ-மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படவுள்ளனர்.

1 More update

Next Story