மாவட்ட அளவிலான கலைத்திருவிழா தொடங்கியது


மாவட்ட அளவிலான கலைத்திருவிழா தொடங்கியது
x

கரூரில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நேற்று தொடங்கியது. இதையடுத்து மாணவ-மாணவிகள் நடனம் ஆடி அசத்தினர்.

கரூர்

கொண்டாட்டங்கள்

தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாகவும், பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைக்கும் நோக்கோடு கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. அந்தவகையில் 2023-24-ம் கல்வியாண்டில் அரசு, ஊராட்சி, ஒன்றிய நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் நடத்தப்பட்டது. இதில் முதல் இடம் பிடித்த மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.

கலைத்திருவிழா தொடங்கியது

இதனைத்தொடர்ந்து வட்டார அளவில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நேற்று தொடங்கியது. கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியினை கலெக்டர் தங்கவேல் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதேபோல் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், கரூர் பசுபதீஸ்வரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் போட்டிகள் தொடங்கியது.இப்போட்டியில் கரூர் மாவட்டத்தில் உள்ள 279 அரசு, ஊராட்சி ஒன்றிய நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்புகளில் பயிலும் 46,193 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் 4,149 மாணவர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.

கல்வி சுற்றுலா

மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டியில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 'கலையரசன்' மற்றும் 'கலையரசி' விருதுகள் வழங்கப்பட உள்ளன.மேலும், மாநில அளவிலான போட்டிகளில் தரவரிசையில் முதன்மைஇடம் பெறும் 20 மாணவர்களைவெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளனர்.

பனை விதைகள் நடும் திட்டம்

பின்னர் கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் மாவட்டம் தோறும் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மணிவண்ணன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய குழுக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story