மாவட்ட அளவில் மாணவர்களுக்கான தடகள போட்டி


மாவட்ட அளவில் மாணவர்களுக்கான தடகள போட்டி
x

திருவண்ணாமலை பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் 630 பேர் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் 630 பேர் பங்கேற்றனர்.

தடகள போட்டி

பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரதியார் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட அளவில் மாணவர்களுக்கான தடகள போட்டி இன்று திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டார். மேலும் மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்று கொண்டார்.

பின்னர் மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் மற்றும் முன்னாள் நகரமன்ற தலைவருடன் இணைந்து கலெக்டர் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினார்.

630 பேர் பங்கேற்பு

மாரத்தான் போரில் பாரசீகா்களை தோற்கடித்த வெற்றிச் செய்தியை தெரிவிக்க பிலிப்பிடீசு என்ற கிரேக்க வீரன் மாரத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு இடையில் எங்கும் நிற்ககாமல் தொடர்ந்து ஓடிச் சென்று வெற்றி செய்தியை தெரிவித்த சிறிது நேரத்தில் மயங்கிவிழுந்து இறந்தான் என்றும், அதன் பின்னர் ஒலிம்பிக் மாரத்தான் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த வரலாறு குறித்து போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 600 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர், 3000 மீட்டர் உள்ளிட்ட ஓட்ட பந்தயங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் என்பன உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 11 வட்டங்களில் இருந்து 630 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

14 வயது, 17 வயது, 19 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. முதல் 2 இடங்களை பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

நிகழ்ச்சியில் மாணவர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story