கரூரில் மாவட்ட அளவிலான தடகள போட்டி; 840 மாணவர்கள் பங்கேற்பு


தினத்தந்தி 29 Oct 2022 6:56 PM GMT (Updated: 29 Oct 2022 7:22 PM GMT)

கரூரில் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 840 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

கரூர்

தடகள போட்டி

கரூர் மாவட்டம், புலியூர் டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கரூர் வருவாய் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை ஆகிய குறு வட்ட அளவிலான தடகள போட்டிகளில் 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

840 மாணவ-மாணவிகள்

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 840 மாணவ-மாணவிகள் இந்த தடகள போட்டியில் பங்கேற்றனர். இந்த தடகள போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1,500 மீட்டர், 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், 4x100 மீட்டர் ரிலே, 4x400 மீட்டர் ரிலே, 3 முறை தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகள் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே நடைபெற்றன. இதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் குடியரசு தின விழாவையொட்டி நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டியில் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் கீதா, துணை மேயர் தாரணி சரவணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story