மாவட்ட அளவில் தடகளம், கபடி போட்டிகள்


மாவட்ட அளவில் தடகளம், கபடி போட்டிகள்
x

மாவட்ட அளவில் தடகளம், கபடி போட்டிகள் நடைபெற்றன.

திருச்சி

மாவட்ட அளவில் தடகளம், கபடி போட்டிகள் நடைபெற்றன.

தடகள போட்டி

திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட இளையோருக்கான தடகள போட்டி அண்ணா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு தடகள சங்க செயலாளர் ராஜு தலைமை தாங்கினார். நீலமேகம் முன்னிலை வகித்தார். போட்டிகளை கமாண்டன்ட் ஆனந்தன் தொடங்கி வைத்தார். முதல் நாளான நேற்று மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில் 8 வயதுக்கு உட்பட்ட 50 மீட்டர் ஓட்டத்தில் நிதிலன் மற்றும் தீப்தியும், 10 வயதுக்கு உட்பட்ட 50 மீட்டர் ஓட்டத்தில் சரவணகுமார், பிரவன்யாஸ்ரீயும் முதலிடத்தை பிடித்தனர்.

12 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 60 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் பர்வேஷ்தர்ஷன் தங்கம் வென்றார். 16 வயதுக்கு உட்பட்ட 60 மீட்டர் ஓட்டத்தில் ஸ்ரீநிஷாவும், 12 வயதுக்கு உட்பட்ட நீளம் தாண்டுதலில் விகாஷினியும், 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 60 மீட்டர் ஓட்டத்தில் பிரான்சிஸ் அஜயும், 600 மீட்டர் ஓட்டத்தில் (20 வயதுக்கு உட்பட்ட பிரிவு) அந்தோணி பெலிக்சும், உயரம் தாண்டுதலில் (14 வயதுக்கு உட்பட்ட பிரிவு) ஜீவாவும் முதலிடத்தை தட்டிச் சென்றனர்.

கபடி போட்டி

தமிழகம் முழுவதும் ஈஷா புத்துணர்வு கோப்பை என்ற தலைப்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நேற்று நடந்தன.

இதில் பெண்கள் பிரிவில் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகளை சார்பு நீதிபதி சோமசுந்தரம் தொடங்கி வைத்து, பேசினார். இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் தீபம் கல்கி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், காட்டூர் யு.டி.சி. ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடந்த இந்த போட்டியின் முடிவில் தீபம் கல்கி அணி 30-27 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.


Next Story