மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி:வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு


மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி:வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 11 April 2023 6:45 PM GMT (Updated: 11 April 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடந்த மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சதுரங்க போட்டி

தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் காமராஜ் கல்லூரி சார்பில் சதுரங்க வீரர், வீராங்கணைகளை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி கல்லூரி வளாகத்தில் நடந்தது. போட்டிகள் 10 வயதுக்கு உட்பட்டோர், 14 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் ஆகிய மூன்று பிரிவுகளாகப் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியாக நடந்தது. 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு, மாநில போட்டியில் பங்கு பெறுவதற்கான தகுதிச் சுற்றுப் போட்டியாக நடந்தது.

இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 60 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 103 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

பரிசு

தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு காமராஜ் கல்லூரி செயலாளர் சோமு தலைமை தாங்கினார். மாவட்ட சதுரங்க கழக துணைத் தலைவர் ரைபின் தார்சியஸ் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு வரவேற்றார். முதன்மை நடுவர் சாந்தி போட்டி அறிக்கையை வாசித்தார்.

சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் மாரிமுத்து கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். ஒவ்வொரு பிரிவிலும் மாணவர்களுக்கு 10 பரிசுகள், மாணவிகளுக்கு 10 பரிசுகள் என மூன்று பிரிவுக்கும் மொத்தம் 60 பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்ற முதல் இரண்டு மாணவ, மாணவிகள் மாநில போட்டிக்கு தூத்துக்குடி மாவட்டம் சார்பில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகச் செயலாளர் கற்பகவள்ளி மற்றும் காமராஜ் கல்லூரி நிர்வாகத்தினர் இணைந்து செய்து இருந்தனர்.


Next Story