மாவட்ட அளவிலான கபடி போட்டி
ஜோலார்பேட்டையில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவில் சிறுவர்களுக்கான சாப்பியன் ஷிப் கபடிபோட்டி நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 20 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர். போட்டியை மாவட்ட அமைச்சூர் கபடி கழக தலைவர் எஸ்.பி.சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் பல்வேறு அணியினர் பங்கேற்றனர். வாணியம்பாடி செவன் ரோஸ் அணிக்கும், ஜோலார்பேட்டை பி.கே.ஸ்போர்ட்ஸ் அணிக்கும் இடையே நடந்த இறுதி போட்டியில் 2 புள்ளி வித்தியாசத்தில் பி.கே.ஸ்போர்ட்ஸ் அணி வெற்றிபெற்று மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். வாணியம்பாடி செவன் ரோஸ் அணியினர் 2-வது இடம் பிடித்தனர்.
மேலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகர செயலாளர் ம.அன்பழகன், நகர மன்ற தலைவர் காவியா விக்டர், துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கி கவுரவித்தனர்.
இந்த போட்டியில் வென்றவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கும் 48-வது மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளர் மதன்குமார், பொருளாளர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.