மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி
மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி கடலூரில் நடைபெற உள்ளதாக கோட்ட தபால் அலுவலகங்களின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
கடலூர்
கடலூர் கோட்ட தபால் அலுவலகங்களின் கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி கடலூர் டவுன்ஹாலில் வருகிற அக்டோபர் மாதம் 11 மற்றும் 12-ந் தேதிகளில் நடக்கிறது. இதில் பல்வேறு கண்காட்சிகளில் வெற்றி பெற்ற தபால் தலைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த தபால் தலைகள் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படும். இந்த கண்காட்சியில் மாணவர்களும், பள்ளிகளும் மற்றும் தபால் தலை சேகரிப்பாளர்களும், தங்களுடைய தபால் தலை சேகரிப்புகளை காட்சிப்படுத்த வரவேற்கப்படுகிறார்கள்.
மேலும் கண்காட்சியையொட்டி மாணவர்களுக்கான கடிதம் எழுதும் போட்டி, ஓவிய போட்டி, தபால் பெட்டி வடிவமைக்கும் போட்டி, பள்ளிகளுக்கான வினாடி- வினா போட்டி நடத்தப்படும். இந்த போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கண்காட்சியின் போது சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு http://peace2k23.blogspot.com/ என்கிற வலைதளத்தை அணுகவும் அல்லது கடலூர் கோட்ட தபால் அலுவலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளேவண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.