நகராட்சி பள்ளிகளில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு


நகராட்சி பள்ளிகளில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
x

காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் நகராட்சி பள்ளிகளில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சகாய் மீனா ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் உணவு தயாரிப்பதற்காக விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள உணவு தயாரிக்கும் சமையற்கூடத்தில் நேற்று காலை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளருமான ஹர்சகாய் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவு தயாரிப்பதற்கான பாத்திரங்கள், உணவு தயாரிப்பதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள மளிகைப்பொருட்கள், காய்கறிகள், குடிநீரின் தரம் போன்றவற்றை பார்வையிட்ட அவர், மாணவ- மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.

சிறப்பாக செயல்படுத்த...

அதனை தொடர்ந்து விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வேளாண் உற்பத்தி பொருட்கள், அதன் அளவு, இடவசதி, விலைப்பட்டியல், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முன்பணம் விவரம், எதிர்கால தேவைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக விழுப்புரம்- திண்டிவனம் ஆகிய நகராட்சிகளில் உள்ள 19 பள்ளிகளில் படிக்கும் 1,855 மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்படுத்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக விற்பனை செய்திடும் வகையில் விலைக்குறைவான காலங்களில் விற்பனை செய்யாமல் சேமித்து வைத்து பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக வேளாண் வணிகத்துறையின் மூலம் கிடங்குகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) கண்ணகி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story