மாணவ-மாணவிகள் விடுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


மாணவ-மாணவிகள் விடுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x

கீழ்பென்னாத்தூரில் மாணவ-மாணவிகள் நல விடுதிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூரில் மாணவ-மாணவிகள் நல விடுதிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் ஆய்வு செய்தார்.

விடுதிகளில் ஆய்வு

கீழ்பென்னாத்தூரில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாணவர் விடுதிக்கு அரசு முதன்மைச் செயலாளரும் வணிகவரித்துறை ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலரான தீரஜ்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு தங்கி படிக்கும் மாணவர்களின் அடிப்படை தேவைகள் குறித்தும், அரசின் மூலம் வழங்கப்படும் அனைத்து உதவிகளும் முறையாக வழங்கப்படுகிறதா? என்றும், மாணவர்களிடம் கேட்டறிந்தும் விடுதிகாப்பாளரிடம் அங்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுகள் தரமான முறையில் உள்ளதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து அங்குள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் மாணவிகள் விடுதிக்கு சென்று மாணவிகளிடமும், விடுதி காப்பாளரிடமும் அடிப்படை தேவைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

அப்போது விடுதிக்கு சுற்றுச்சுவர் வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை நிறைவேற்றி தரப்படும் என்று அவர் கூறினார். மேலும் அப்போது அங்கு வழங்கப்படும் சிற்றுண்டியை சாப்பிட்ட அவர் ருசியாகவும், தரமாகவும் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இதே போன்று தொடர்ந்து வழங்க வேண்டுமென விடுதி காப்பாளரிடம் அறிவுறுத்தினார்.

வளர்ச்சி திட்டப்பணிகள்

பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்ற மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருணாச்சலம், காந்திமதி ஆகியோரிடம் விவரங்களை கேட்டறிந்தும் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது கலெக்டர் பா.முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப்சிங், வருவாய் கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குமரன், தாசில்தார் சக்கரை, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், பேரூராட்சி தலைவர் சரவணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story