மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திடீர் ஆய்வு
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நந்தகோபால் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் அங்கன்வாடி மையக் கட்டிடங்கள், மேல்நீர் தேக்க தொட்டிகள் மற்றும் தூய்மைப் பணிகள், பள்ளியின் கழிவறை பணிகள், கழிவுநீர் கால்வாய் பணிகள், சாலை பணிகள் உள்ளிட்ட பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக முழுமை பெறாத நிலையில் இருப்பது ஆய்வின் போது தெரிய வந்தது. இதனால் சம்பந்தப்பட்ட அலுவலர்களை கண்டித்து கண்காணிப்பு அலுவலர் நந்தகோபால், நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் ஒரு மாதத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கு.செல்வராசு, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணவாளன், துரை உள்ளிட்ட பொறியாளர்கள், அலுவலர்கள், உதவியாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.