கோட்ட அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை


கோட்ட அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
x

மணல்குவாரிகளை மாட்டுவண்டிகளுக்கு ஒதுக்கக்கோரி விழுப்புரம் கோட்ட அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்,

மாட்டுவண்டிக்கு ஒதுக்கிய 21 மணல் குவாரிகளை லாரி குவாரியாக மாற்றியதை கண்டித்து கடலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் மற்றும் சுரங்கங்கள், கண்காணிப்பு விழுப்புரம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு கடலூர் ஏ.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பரணி தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட தலைவர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட பொதுசெயலாளர் சவுரிராஜன் கலந்து கொண்டு சங்க கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.

தாசில்தார் பேச்சுவார்த்தை

போராட்டத்தில் கலந்து கொண்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் கடலூர் மாவட்டம் வானமாதேவி, வான்பாக்கம், அக்கடவல்லி, பூ.ஆதனூர், கச்சிபெருமாநத்தம், கிளியனூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கப்பட உள்ள மணல் குவாரிகளை முழுமையாக மாட்டுவண்டிகளுக்கு ஒதுக்க வேண்டும், மணல் சேமிப்பு கிடங்கு அமைக்காமல் மாட்டு வண்டிக்கு நேரடியாக ஆற்றில் மணல் வழங்கவேண்டும், தினசரி நாளொன்றுக்கு மாட்டு வண்டிக்கு ஒரு நடை மணல் வழங்கிட வேண்டும், மாட்டுவண்டி தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர் களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார் மற்றும் தாலுகா போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேசி, உங்களது கோரிக்கைகளை அரசிடம் எடுத்து கூறி நிறைவேற்றப்படும் என கூறினர். இதனை ஏற்ற தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story