தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை மும்முரம்: பொள்ளாச்சி சந்தையில் ஆடுகள் விலை உயர்வு
தீபாவளி பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தையில் ஆடுகள் விலை உயர்ந்ததோடு விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
பொள்ளாச்சி
தீபாவளி பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தையில் ஆடுகள் விலை உயர்ந்ததோடு விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
ஆட்டு சந்தை
பொள்ளாச்சி சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறும். அதன்படி நேற்று ஆட்டு சந்தை நடந்தது. சந்தைக்கு பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, கோட்டூர் மற்றும் உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
ஆடுகளை வாங்குவதற்கு உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் வியாபாரிகள் அதிகம் வருகின்றனர். இதற்கிடையில் 24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் சந்தைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் கேரளாவில் இருந்து அதிகமாக வியாபாரிகள் ஆடுகளை வாங்குவதற்கு வந்திருந்தனர். இதனால் சந்தையில் ஆடு விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
விலை அதிகரிப்பு
பொள்ளாச்சி சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த வாரத்தை விட அதிமாக ஆடுகள் கொண்டு வரப்பட்டன. சந்தைக்கு சுமார் 800 முதல் 1000 ஆடுகள் வந்தன. 5 கிலோ முதல் 30 கிலோ வரை எடைக்கு ஏற்ப ஆடுகள் விற்பனை ஆனது.
8 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும், 25 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை தரத்திற்கு ஏற்ப விற்பனை ஆனது. தீபாவளி பண்டிகையையொட்டி வரத்து அதிகரித்தும், விலை குறையவில்லை. மேலும் வழக்கத்தை விட அதிகளவு வியாபாரிகள், பொதுமக்கள் ஆடுகளை வாங்கி சென்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.