தூத்துக்குடியில், தீபாவளி கூட்டநெரிசலில் குற்ற செயல்களை தடுக்க கேமரா பொருத்திய வாகனத்தில் போலீஸ் ரோந்து


தூத்துக்குடியில், தீபாவளி கூட்டநெரிசலில்  குற்ற செயல்களை தடுக்க கேமரா பொருத்திய  வாகனத்தில் போலீஸ் ரோந்து
x
தினத்தந்தி 21 Oct 2022 6:45 PM GMT (Updated: 21 Oct 2022 6:46 PM GMT)

தூத்துக்குடியில், தீபாவளி கூட்டநெரிசலில் குற்ற செயல்களை தடுக்க கேமரா பொருத்திய வாகனத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கூடுதல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில், தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலில் குற்ற செயல்களை தடுக்க கேமரா பொருத்திய வாகனங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். மேலும் கூடுதல் போலீசாரும் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கண்காணிப்பு

தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டத்தில் குற்ற செயல்கள் நிகழ்வதற்கு வாய்ப்பு உள்ளதால், அதனை தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய முக்கிய 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் 4 புறமும் சுழன்று கண்காணிக்க கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்ட 2 ரோந்து வாகனங்கள் மூலம் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த கண்காணிப்பு கோபுரம் மற்றும் கேமரா பொருத்திய வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று தொடங்கி வைத்து பேசினார்.

பாதுகாப்பாக..

அப்போது, தூத்துக்குடி மாநகரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடக்கும் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு 2 நான்கு சக்கர வாகனங்களில் 360 டிகிரியில் நான்கு திசைகளிலும் கண்காணிக்கக்கூடிய அளவில் சுழலும் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அந்த ரோந்து வாகனத்தில் ஒரு போலீஸ்காரர் அமர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார். இந்த வாகனம் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடும். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் செயின் பறிப்பு, உடமைகள் திருடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும். பொதுமக்கள் கடைவீதிகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது தங்களது உடமைகளிலும் கவனமாக இருக்க வேண்டும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த 3 நாட்களுக்கு தூத்துக்குடி நகரத்தில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சீர் செய்யப்படும். மக்கள் வீட்டில் பாதுகாப்பான முறையில் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் சந்தீஷ், ஸ்ரேயாகுப்தா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சத்தியராஜ், ஜெயராஜ், லோகேசுவரன், மாயவன், வெங்கடேஷ், சிவசுப்பு மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story