இன்று தீபாவளி பண்டிகை: புத்தாடை, பட்டாசுகள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம் விழுப்புரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்


இன்று தீபாவளி பண்டிகை:  புத்தாடை, பட்டாசுகள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்  விழுப்புரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 23 Oct 2022 6:45 PM (Updated: 23 Oct 2022 6:46 PM)
t-max-icont-min-icon

இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில், புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

விழுப்புரம்


இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் முன்கூட்டியே தயாராகி கடந்த சில நாட்களாக புத்தாடைகள் வாங்குவதற்காக ஜவுளிக்கடைகளுக்கு திரண்டு சென்றனர். நேற்றும் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 7 மணி முதலே கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

விழுப்புரம் நகரை பொறுத்தவரை ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள் நிறைந்த நேருஜி சாலை, எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதி, கே.கே.சாலை, திரு.வி.க. சாலை, திருச்சி மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம், கூட்டமாக சென்று தீபாவளியை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.

போக்குவரத்து நெரிசல்

இவ்வாறு கடைவீதிகளுக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வெளியே வந்த பொதுமக்களால் விழுப்புரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய கூடுதலாக போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருப்பினும் நேற்று காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி வாகனங்கள் சீரான வேகத்தில் சென்றதை காண முடிந்தது.

மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்ட நேரிடும் என்பதால் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் முற்றிலும் தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் கூட்டத்தை கண்காணிக்கும் வகையிலும் விழுப்புரம் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளான வீரவாழியம்மன் கோவில், பழைய பஸ் நிலையம், காமராஜர் சாலை, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார், கண்காணிப்பு உயர்கோபுரங்களை அமைத்து அதிலிருந்தபடியே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இதேபோல் திண்டிவனம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், கோட்டக்குப்பம், மயிலம் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று கடைவீதிகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story