தீபாவளி திருநாளில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாட்டை விதித்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது: பொதுமக்கள்
தீபாவளி திரு நாளில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாட்டை விதித்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை
இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமானது ஒன்று தீபாவளி ஆகும். தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான். அடுத்து இனிப்பு, புதிய ஆடை ஆகும்.
பட்டாசு, இனிப்பு இல்லாத தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாது. காலம், காலமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையையொட்டி பட்டாசுகள் பல தரப்பட்ட மக்களாலும் வெடிக்கப்படுகிறது. முன்பு இருந்த பட்டாசு ரகங்களை விட தற்போது புது விதமான ரகங்கள், வித, விதமான வண்ணங்களிலும் பல்வேறு வகையிலான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துவிட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகளை வெடிப்பது உண்டு. இதில் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதில் விழாக்கோலம் பூண்டது போல காணப்படும். இரவில் வாணவேடிக்கை போல தற்போது பல்வேறு ரக வெடிகளும் வந்துவிட்டன.
நேர கட்டுப்பாடு
இந்த நிலையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு முதல் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதில் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையும் நேரம் அனுமதிக்கப்பட்டது. இந்த உத்தரவானது கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. அதன்படி இந்த ஆண்டும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு அதே 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. எனவே வருகிற 24-ந் தேதி பண்டிகை கொண்டாடப்படுகிற நிலையில் இந்த உத்தரவினை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
போலீசார் வழக்குப்பதிவு
கடந்த ஆண்டுகளில் இந்த உத்தரவு இருந்தாலும் இதனை பெரும்பாலானோர் கடைப்பிடித்ததாக தெரியவில்லை. மேலும் அவர்கள் விருப்பப்பட்ட நேரங்களில் பட்டாசுகளை வெடித்தனர். இரவு நேரங்களில் மட்டும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளுக்கு பதிலாக வாணவேடிக்கை போன்ற பல வண்ணங்களில் வெடிக்கும் வெடிகளை வெடிக்க செய்தனர். நள்ளிரவிலும் பட்டாசு சத்தம் ஒலித்து கொண்டிருந்தது. இதற்கிடையில் தீபாவளி பண்டிகை அன்று அனுமதிக்கப்பட்ட நேரங்களை தவிர்த்து மற்ற நேரத்தில் பட்டாசு வெடித்ததாக சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததும் உண்டு. அந்த வகையில் கரூர் மாவட்டத்திலும் போலீசார் வழக்குப்பதிவு செய்த வரலாறும் இருக்கிறது. இந்த நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு தொடர்பாக பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது எப்படி
கரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் தீயணைப்பு நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்:-
தீபாவளி அன்று தீயணைப்பு நிலையத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் தேவையில்லாத விடுப்புகளை தவிர்த்து விழிப்புடன் செயல்பட உள்ளனர். மக்கள் அதிகமாக கூடும் ஜவகர் பஜார், கோவை ரோடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டு மக்களின் பாதுகாப்பினை தீயணைப்பு துறை சார்பில் உறுதி செய்வோம். அரசு விதித்த நேரங்களில் மட்டுமே ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்க வேண்டும். எதிர்பாராத விதமாக உங்கள் மீது தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீர் ஊற்றி அணையுங்கள் அல்லது சம தரையில் படுத்து உருளுங்கள். நீண்ட ஊதுபத்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க செய்யுங்கள். தீக்குச்சி, குட்டையான பத்திகள், மெழுகுவர்த்தி ஆகியவற்றை கொண்டு பட்டாசுகளை கொளுத்தாதீர்கள். தீ புண்ணுக்கு உடனே குளிர்ந்த நீரையோ அல்லது சாதாரண நீரையோ ஊற்றுங்கள். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள். தீக்காயம் ஏற்பட்டால் உப்பு தண்ணீரை ஊற்றுவதை தவிர்க்க வேண்டும். பட்டாசு கொளுத்தும் போது ஒரு வழியில் தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள். பட்டாசு, மத்தாப்பு, பொரிவானம் போன்றவற்றை வீட்டிற்கு வெளியே வெடியுங்கள். பட்டாசுகளை வீடுகளில் பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும், என்றார்.
விலை 40 சதவீதம் உயர்வு
பட்டாசு வியாபாரி பாஸ்கரன்:- உச்சநீதிமன்ற உத்தரவின் படி நாம் சிவகாசியில் தயாரிக்கும் வரும் பசுமை பட்டாசுகளே வெடிப்பதற்கு உகந்ததாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளது. தற்போது உற்பத்தி செலவு மற்றும் இதர செலவுகள் உயர்ந்த தன் காரணமாக பட்டாசுகளின் விலை 40 சதவீதம் உயர்ந்து உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாட முடியாத சூழ்நிலை இருந்தது. இந்தாண்டு தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் குடும்பத்துடன் கொண்டாட முன் வந்து உள்ளனர். எனவே அனைவரும் தமிழக அரசு அறிவித்துள்ள நேர கட்டுப்பாட்டை பயன்படுத்தி பட்டாசுகளை வேடிக்க வேண்டும், என்றார்.
மிக்க மகிழ்ச்சி
பள்ளி மாணவர் ஜோஹிந்தர்:- தீபாவளி அன்று அதிகாலை எழுந்து குளித்து புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடிப்பதில் மிக்க மகிழ்ச்சி. முன்பெல்லாம் தீபாவளி அன்று அதற்கு முன்பாகவே வீடுகளில் இனிப்புகள் செய்து நண்பர்கள் மற்றும் பக்கத்து வீடுகளுக்கு இனிப்புகளை கொடுத்து மகிழ்வது வழக்கமான ஒன்றாக இருந்தது. தற்போது அவ்வாறு இல்லாமல் கடைகளில் இனிப்புகளை வாங்கி கொடுக்கும் வழக்கம் உள்ளது. இதை தவிர்த்து முன்பு போல் வீடுகளில் இனிப்புகள் செய்து தீபாவளியை கொண்டாட வேண்டும், என்றார்.
ஏமாற்றம் அளிக்கிறது
குளித்தலை பகுதியை சேர்ந்த வி.செல்வசாந்தி:- ஆண்டுக்கு ஒரு முறை வரக்கூடிய இந்த தீபாவளி பண்டிகையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர். அரசு மதுபான கடையை நாள் முழுவதும் திறந்து வைக்கும் நிலையில், குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் ஏமாற்றம் அளிக்கிறது, என்றார்.
குளித்தலை பகுதியை சேர்ந்த ஜீ.பரணிகுமார்:-
தீபாவளி பண்டிகை அன்று பொதுமக்கள் காலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடைகள் உடுத்தி, சுவாமியை கும்பிட்ட பின்னரே பட்டாசு வெடிக்க தொடங்குவார்கள். அதற்கே காலை சுமார் 9 மணிக்குமேல் ஆகிவிடும். அப்படி இருக்கும் பொழுது தீபாவளியன்று காலையில் 6 மணி முதல் 7 மணிக்குள் மட்டும் பட்டாசுகள் வெடிப்பது என்பதற்கு சாத்தியக்கூறுகளே இல்லை, என்றார்.