மத்திய அரசிடம் அ.தி.மு.க. அடமான பொருளாக உள்ளது- கி.வீரமணி பேட்டி
மத்திய அரசிடம் அ.தி.மு.க. அடமான பொருளாக உள்ளது என்று கி.வீரமணி கூறினார்.
கடத்தூர்
மத்திய அரசிடம் அ.தி.மு.க. அடமான பொருளாக உள்ளது என்று கி.வீரமணி கூறினார்.
தனியார் மயம்
ஈரோடு மாவட்டம் கோபியில் திராவிட மாடல் விளக்க பயண பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திராவிட மாடல் விளக்கப் பயண பிரச்சார பொதுக்கூட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கவே இந்த பயணம். சமூகநீதிக்கு எதிரான பல்வேறு நிலைபாடுகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது. 77 முதல் 80 சதவீதம்வரை உயர் சாதியினர் மட்டுமே நீதிபதியாக உள்ளனர். தகுதி படைத்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் ஏராளமானோர் இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மத்திய அரசு எல்லாவற்றையும் தனியார் மயமாக்கி வருகிறது. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே அனைத்து சலுகைகளையும் வழங்கி வருகிறது.
அடமான பொருள்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் தொடங்கி பல ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை.
பாரதீய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தன்னுடைய கட்சி வளர்ந்திருக்கிறது என்று கூறி வருகிறார். அதனால் அவரே ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடலாம். அவர் கட்சி வளர்ந்துள்ளதா? என்பதை காட்டுவதற்கு இதைவிட அருமையான வாய்ப்பு வேறு கிடைக்காது. ஆனால் மற்றவர்களை முன்னால் தள்ளிவிட்டு இவர் ஏன் பின்வாங்குகிறார் என்று தெரியவில்லை. புலிக்கு பயந்தவர்கள் என் மீது படுத்துக் கொள்ளுங்கள் என்பது போன்று அண்ணாமலை நிலை பரிதாபமாக உள்ளது. அதைவிட பரிதாபமாக மத்திய அரசிடம் அடமான பொருளாக அ.தி.மு.க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் மணிமாறன், மாவட்ட தலைவர் சிவலிங்கம், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சென்னியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்