பண்ருட்டி அரசு ஆஸ்பத்திாியில் பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு
பண்ருட்டி அரசு ஆஸ்பத்திாியில் பெண் டாக்டரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பண்ருட்டி,
சிகிச்சை அளிக்கவில்லை
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் தற்போது கடலூர் வடக்குமாவட்ட தே.மு.தி.க. செயலாளராக இருந்து வருகிறார். இவருடைய மகள் சுகன்யா, அதே பகுதியில் தனது கணவர் ரஞ்சித்துடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு நிவின்(வயது 5) என்ற மகன் உள்ளான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த நாய், சிறுவன் நிவின் முகத்தில் கடித்து விட்டது. இதையடுத்து அவனை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது ஆஸ்பத்திரியில் இருந்த பெண் டாக்டர், உடனடியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அறிந்த தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று, இதுகுறித்து டாக்டர் விஜயலட்சுமியிடம் கேட்டுள்ளார்.
தர்ணா போராட்டம்
இதனால் டாக்டர் விஜயலட்சுமிக்கும், சிவக்கொழுந்துவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சிவக்கொழுந்து தனது உறவினர்கள் சிலருடன் ஆஸ்பத்திரி வார்டு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் விரைந்து வந்து முன்னாள் எம்.எல்.ஏ. சிவக்கொழுந்துவை சமாதானப்படுத்தி தர்ணா போராட்டத்தை விலக்கி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து டாக்டர் விஜயலட்சுமி பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதில் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்பேரில் முன்னாள் எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.